டெல்லியில் மலிவு விலையில் தக்காளி – மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மலிவு விலையில் தக்காளி விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக…

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மலிவு விலையில் தக்காளி விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை உயர்வால் சில உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளில் இனி தக்காளியை பயன்படுத்தமாட்டோம் என அறிவிக்கும் அளவிற்கு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.

குறிப்பாக தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ₹108 ஆக இருப்பதாக நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தக்களியின் விலை டெல்லியில் ரூ.150, லக்னோவில் ரூ.143, சென்னையில் ரூ.123 என அனைத்து பகுதிகளிலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தக்காளி விலை ஏன் அதிகமாக உள்ளது?

தக்காளி அறுவடை காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உச்சத்தில் இருக்கும். பொதுவாக ஜூலை-ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தக்காளி உற்பத்தி குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு விளைச்சளிலும் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தக்காளி விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டாலும், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உபரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56%-58% வரை இப்பகுதிகளிலேயே உறுபத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் உற்பத்தி பருவங்களின் அடிப்படையில் மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு தக்காளி கிடைக்கிறது.

இப்போது மலையும் அதிகரித்துள்ளதோடு, விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் அதிக போக்குவரத்து இழப்புகள் ஆகிய கூடுதல் சிக்கல்கள் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளன. இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் ரூ.22 ஆக இருந்த தக்காளி விலை இந்த ஆண்டு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசே தக்காளியை பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து, முக்கிய இடங்களை தேர்வு செய்து அங்கே வெள்ளிக்கிழமை முதல் மலிவு விலையில் தக்காளியை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தக்காளி விலை எப்போது குறையும்?

நாசிக்கில் இருந்து தக்காளி விநியோகம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் அவுரங்காபாத் பகுதிகளில் இருந்து கூடுதல் விநியோகம் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மத்திய பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து தொடங்க வாய்ப்புள்ளது.இதனால் விரைவில் தக்காளில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.