29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லட்சியப் பயணம் தொடரும்; வெற்றிகள் நிச்சயம் குவியும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

திமுக தலைவராக 6-வது  ஆண்டில் அடியெடுத்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரை நூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 28) ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. 94 வயதில் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை எனும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டவர் தலைவர் கலைஞர். பன்முக ஆற்றல் கொண்ட நிர்வாகி – படைப்பாளர். அவருடைய பேராற்றல் எனக்கு இல்லை. ஆனால், தலைவர் கலைஞரிடம் நான் கற்றுக்கொண்டு, அவரிடமே பாராட்டு பெறும் அளவிற்கு உழைக்கக் கூடிய வலிமை எனக்கு உண்டு. இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்திடக் கலைஞரும் அவருடைய ஒவ்வொரு உடன்பிறப்பும் எப்படி உழைத்தார்களோ, அது போலத் தான் கலைஞரின் பிள்ளையான நானும் ஓர் உடன்பிறப்பு என்ற தகுதியுடன் தலைமைப் பொறுப்பினை சுமந்து, உங்களில் ஒருவனாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை 2018-ஆம் ஆண்டு இயற்கை நம்மிடமிருந்து பிரித்த போது, இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை உங்கள் அனைவரின் ஆதரவுடன் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என் மீது சுமத்தினார். கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் நானும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அப்போது, கழகம் எதிர்க்கட்சியாக இருந்தது. நாடாளுமன்ற மக்களவையில் நமக்கு ஒரு இடம் கூட இல்லை. தலைவரை இழந்த கழகத்தில் பிளவு வராதா என்று எதிர்பார்த்த எதிரிகள் உண்டு. வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக கற்பனைக் குதிரையில் பயணம் செய்ய நினைத்தவர்கள் உண்டு. முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்பும் மெய்ப்பித்துக் காட்டியதுடன், ’வெற்றிடத்திற்கு வேலை இல்லை, இது வெற்றிக்கான இயக்கம்’ என்பதை நம் உழைப்பால் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணியை உருவாக்கினோம். அது வெறும் தேர்தல் நேரக் கூட்டணி அல்ல. கொள்கை உணர்வுமிக்க கூட்டணி. ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் பன்முகத்தன்மை மீதும், மதச்சார்பின்மை கொள்கை மீதும் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலில் அந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் பெற்ற மகத்தான வெற்றி என்பது இந்திய அளவிலான அரசியல் இயக்கங்களுக்கு ஒரு ஃபார்முலாவாக ஆனது. மக்களவையில் 3-வது பெரிய கட்சி என்ற தகுதியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றது. கழகத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் தேடித் தந்த பெருமை இது.

அதன்பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி களம் கண்டு, தமிழ்நாட்டு உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில், எதிர்க்கட்சியின் வெற்றிப் பதிவு செய்யப்பட்டது. உடன்பிறப்புகளாம் உங்களின் உழைப்புதான் அன்றைய ஆளுங்கட்சியினரின் பணபலம், அதிகார பலம் எல்லாவற்றையும் மீறிக் கழகத்தையும் தோழமைக் கட்சிகளையும் வெற்றிபெறச் செய்தன.

2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஓயாத உழைப்பும் – ஒற்றுமையான செயல்பாடும் முக்கியமான காரணமாகும். அதன் விளைவாக, தி.மு.க.வுக்குத் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலத்தை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். என்னுடைய வெற்றிச் சான்றிதழை முத்தமிழறிஞர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தில் வைத்து, நன்றிக் காணிக்கை செலுத்திவிட்டு, பதவியேற்பு நிகழ்விலும் அவர் பெயரையும் சேர்த்தே உச்சரித்து, இது கலைஞர் அவர்களின் ஆட்சியின் தொடர்ச்சிதான் என்பதை உறுதி செய்தேன்.

கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்கள் தான், சாதனைகள்தான்! சிறு குறை சுட்டிக்காட்டப்பட்டாலும் உடனடியாக அதனைச் சரி செய்து, ஆட்சி சக்கரம் விரைவாகவும் வலுவாகவும் சுழலும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த உழைப்புக்கு மக்கள் தந்த அங்கீகாரம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கும் கூட்டணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் உண்மையான ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்கின்ற இயக்கம். மக்கள் நலனுக்கு ஆதரவானவர்கள் யார், மக்களின் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு செயல்படுகின்ற இயக்கம். அந்த வகையில்தான் 2019-ஆம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது.

அதுபோல, கழக உடன்பிறப்புகளும் இந்த இயக்கத்தின் இலட்சியமே பெரிது என்று ஒன்றுபட்டு உழைக்கும்போது மகத்தான வெற்றி கிடைக்கிறது. தி.மு.கழகம் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது உங்களில் ஒருவனான என் இலக்கு. தொடர்ச்சியாக நாம் ஆட்சியில் இல்லாத சூழல்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி எந்தளவு பாழ்பட்டது என்பதைப் பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பார்த்தார்கள். அனுபவித்தார்கள். அந்த நிலையைக் கடந்த இரண்டாண்டுகளில் பெருமளவு மாற்றி இருக்கிறோம். வளர்ச்சிப் படிக்கட்டுகளில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இந்த வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் தி.மு.கழகம் தொடர்ந்து ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமைய வேண்டும்.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எக்காலத்திலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை மக்கள் அறிவார்கள். தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிடப் பெருமளவு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இத்தகைய நிலையிலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அயராமல் உழைக்கிறது திராவிட மாடல் அரசு. விடியல் வெளிச்சத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பா.ஜ.க அரசு அலறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும்.

இந்தியாவின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி.. வெற்றி.. மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும்.

ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். கழக உடன்பிறப்புகள் அந்த ஒற்றுமையைக் கட்டிக்காத்து உழைத்திட வேண்டும் என்பது கழகத் தலைவர் என்ற முறையில் எனது அன்பு வேண்டுகோளாகும். உங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க நான் இருக்கிறேன். என் வேண்டுகோளை நிறைவேற்ற நீங்கள் இருக்கிறீர்கள். நம் உயிருக்கு உயிராகத் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் இருக்கிறது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட தி.மு.க எனும் பேரியக்கம், நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram