யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்ததற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்ததற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார்.

இதுதவிர இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து படம் திரையிடப்பட்ட முதல் நாள் அன்றே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி திரையிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்தும், நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்தும் இருந்த நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த 9-ஆம் தேதி அன்று தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரிவிலக்கு அளித்து, அதை உறுதிப்படுத்தும் விதமாக  தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்ததற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இயக்குநர் சுதிப்டோ சென், தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால், நடிகர் அதா ஷர்மா உள்ளிட்ட படக்குழுவினர் லக்னோவில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதலமைச்சர் ஆதித்யநாத்திடம் படம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் படத்தை பார்க்கும்படி படக்குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தப் படத்தை யோகி ஆதித்யநாத் இன்று தனது அமைச்சர்களுடன் பார்க்க உள்ளதாக முதலமைச்சர் செயலகம் கூறியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.