நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவிலுள்ள சாத்தனூர் கிராமத்தில் வார்டு-2 பஞ்சாயத்து தலைவராக உள்ளேன் என சுட்டிக்காட்டியுள்ளார். தங்கள் சாத்தனூர் கிராமத்திலுள்ள அரசு நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக சிலர் பத்திரம் பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பகுதி அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு ஏதுவான பகுதி ஆகும்.
இங்கு பஞ்சாயத்து அலுவலகம். அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்பை அகற்றி அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில்
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு இடத்தில் இந்த அலுவலகம் கட்டுங்கள் என்று எப்படி உத்தரவிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக அரசு தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
யார், யார் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களது தொலைபேசி எண்களை மனுதாரர் வாங்கி நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்தனர்.
கூட்டங்களை சேர்ப்பது நீதிமன்றத்திற்கு நோக்கமல்ல எவ்வளவு எளிமையாக வழக்குகளை உடனுக்குடன் முடிக்க முடியுமோ? அதுபோன்று
செயல்பட வேண்டும் என தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
– இரா.நம்பிராஜன்







