முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரேயொரு வாக்கு பெற்ற கோவை வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரேயொரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஓன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.

இந்த வார்டில் மொத்தம் 1551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதே போல பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு இருந்த நிலையில் ஓரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார். இதே போல தேமுதிக சார்பில் பெயின்டிங் பிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 4 வது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் அந்த வார்டில் வாக்குகள் இல்லை. 1551 பேர் கொண்ட 9 வது வார்டில் வாக்கே இல்லாத பா.ஜ.க வேட்பாளர் கார்த்திக்கு ஓரே ஒருவர் வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த செய்தி சமூக வலைதளத்தில் தீ போல பரவியது. இதனையடுத்து இன்று தமிழ்நாட்டில் நடக்கும் வன்முறைகள் மற்றும் ஆணவக் கொலைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதே போல திமுக எம்.பிக்கள் மேல் உள்ள வழக்குகளை விசாரிக்க கோரியும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குப்பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தடய மரபணு தேடல் மென்பொருளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

Halley karthi

உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்தார்கள்:மாணிக்கம் தாகூர்

Niruban Chakkaaravarthi

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

Saravana Kumar