தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஏலக்காய் லோடு ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்து விட்டதாக மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற லாரி ஓட்டுநர், காவல் நிலைய கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த மரணத்தை ‘தற்கொலை’ என்று கூறி தமிழகக் காவல்துறையினர் மூடி மறைக்க முயன்றாலும், காவல் மரணங்களுக்கு பெயர் போன தவெக ஆட்சியில், இது மற்றுமொரு காவல் மரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
காரணம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தான் தமிழக காவல் நிலையங்களின் கண்காணிப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளனவா? அல்லது புகாரளிக்க வந்த நபர், காவல் நிலைய கழிவறையிலேயே தூக்கு மாட்டிக் கொள்ளும் வரை காவலர்கள் என்ன உறங்கிக் கொண்டிருந்தார்களா? கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்டோர் அரசு காவலில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், காவலர்களின் இந்த சாக்குப்போக்கை கொஞ்சம் கூட நம்மால் நம்ப முடியவில்லை.
எனவே, லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தின் உண்மைப் பின்னணியை எவ்வித சமரசமுமின்றி தவெக அரசு விசாரிப்பதோடு, தமிழகக் காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் விசாரணைக் கைதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும். முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நிர்வாகக் குளறுபடிகளுக்காக, அப்பாவி மக்களின் உயிர்களை நாம் அடகு வைக்க முடியாது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




