கடிதம் எழுதிய மாணவனை நேரில் அழைத்து பரிசளித்து ஊக்கப்படுத்திய தலைமைச்செயலார் இறையன்பு!

தலைமைச்செயலாளர் இறையன்பு தனக்கு கடிதம் எழுதிய மாணவன் இறையன்புவை அவரது குடும்பத்தினருடன் தலைமைச்செயலகத்திற்கு நேரில் அழைத்து, பேனா பரிசளித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.  தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு இம்மாதத்துடன் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், சென்னையை அடுத்த…

தலைமைச்செயலாளர் இறையன்பு தனக்கு கடிதம் எழுதிய மாணவன் இறையன்புவை அவரது குடும்பத்தினருடன் தலைமைச்செயலகத்திற்கு நேரில் அழைத்து, பேனா பரிசளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். 

தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு இம்மாதத்துடன் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் இறையன்பு, தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு . நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக என் பெற்றோர்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வருப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன்.

ஐயா நானும் எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும் குழியாகவும் மாறி விடுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பலர் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவுகூர்ந்து எங்கள் தெருவிற்க்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு மாணவன் கோரிக்கை வைத்திருந்தார்.

மாணவன் இறையன்பு எழுதிய கடிதம் இணையத்தில் வைரல் ஆனது. இதனை அடுத்து தலைமை செயலாளர் இறையன்பு, தனக்கு கடிதம் எழுதிய மாணவனையும், அவரது குடும்பத்தினரையும் தலைமைச்செயலகத்திற்கு நேரில் அழைத்து உரையாடினார்.

அப்போது, சாலை வசதி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மாணவரிடம் தெரிவித்த தலைமைச்செயலாளர் இறையன்பு, பேனா பரிசளித்து மாணவன் இறையன்புவை நன்றாக படிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.