சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் கூறியதாவது:
தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்று, விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவான பதிலை அளிப்பார் என்றும், இதனை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மக்களுக்கு விளக்குவார் என்றும் எதிர்பார்த்தோம்.
ஆனால், அதற்கு பதிலாக பழைய கதைகளை பேசிவிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, தற்போது சட்டரீதியாக பயன்படுத்த முடியாது என கூறப்படும் கமிஷன் அறிக்கைகளை உலகத்தின் உண்மை போல் முதலமைச்சர் பேசுகிறார்.
மேலும், மிசா குறித்து கொச்சையாக பேசுகிறார். ஜனநாயகத்திற்காக நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில், எத்தனை பேர் போராடி சிறை சென்றார்கள், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்த வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும். அவர்களுடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் எத்தனை பேர் சிறைக்கு சென்றார்கள் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதற்காக மட்டுமே சட்டமன்றம் இருக்கிறது என்பதைப் போன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்கள் தகுந்த பதிலை நிச்சயம் அளிப்பார்கள். முதலமைச்சர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு உரிய பதில் அளிக்காமல் கீழ்த்தரமான முறையில் பதிலளிப்பது வருத்தமளிக்கிறது.
மேலும், ‘மக்கள் தங்களை பார்த்துக் கொண்டு, தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், திருந்த வேண்டும்’ என்று முதலமைச்சர் கூறுவது அவர் பொறுப்புடன் பேசுகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இருக்கிறார்கள். மக்கள் மீது பழியை சுமத்தி, ‘நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும், நீங்களே திருந்த வேண்டும்’ என்று கூறினால் அரசாங்கமே தேவையில்லை என்ற நிலைதான் உருவாகும்.
மக்கள் நலனில் முதலமைச்சர் பொறுப்புடன் செயல்பட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு” இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.




