மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதே போல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி அக். 6 ஆம் தேதி 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை அல்லது நாளை மறுநாள் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




