தமிழகத்துக்குத் தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிடுகிறதா என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி மத்திய ஜல்சக்தி அமைச்சரை வலியுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது..
“ காவிரி மேலாண்மை ஆணையம் கண்களை மூடிக்கொண்டு நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடுகிறது. ஆனால், எத்தனை அணைகள் அங்கு உள்ளன, அதில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை ஆய்வு செய்து அவர்கள் உத்தரவிட வேண்டும். காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது “ என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.







