மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “UPI மீதான MDR கட்டணம் வாடிக்கையாளர்களைப் பாதிக்காது, வியாபாரிகள்தான் ஏற்றுக்கொள்வார்கள், இது அரசின் வரி அல்ல” என்று கூறி மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லப் பார்க்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால் இத்தகைய சப்பைக்கட்டுகள் கள எதார்த்தத்தை முற்றிலும் மறைக்கும் செயல் என்பதை வணிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 4.5 லட்சம் விநியோகஸ்தர்கள் மற்றும் 1.3 கோடி சிறு சில்லறை வணிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் AICPDF (அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு), UPI-க்கு MDR கட்டணம் விதிப்பதால் FMCG விநியோகத் துறைக்கு ஆண்டுக்கு ₹7,000 முதல் ₹9,000 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. நுகர்வோர் மற்றும் சில்லறை வர்த்தகம் என இரு முனைகளிலும் இரட்டைச் சுமையாக விழும் இந்தக் கட்டணத்தை, 3.5 முதல் 6 சதவீத குறைந்த லாப வரம்பில் இயங்கும் வணிகர்கள் எவ்வாறு ஏற்க முடியும்?
MRP விலைக் கட்டமைப்பினால் இந்தக் கூடுதல் செலவை நுகர்வோர் மீது சுமத்தவும் முடியாது; அதே சமயம் விநியோகஸ்தர்களும் சில்லறை வியாபாரிகளும் தாங்களாகவே உள்வாங்கிக் கொள்ளவும் முடியாது என்பதே கள எதார்த்தம். எளிய வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில், “இது அரசின் வரி அல்ல, NPCI மற்றும் வங்கிகளின் முடிவு” என்று மத்திய அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் சிறு வணிகர்களை நசுக்கும் இந்த MDR முடிவை மத்திய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.




