மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரும் வழக்கில், பதிலளிக்குமாறு திரைப்பட தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோகிபாபு நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான படம் மண்டேலா. படத்தில் நடிகர் யோகிபாபு முடிதிருத்தும் தொழிலாளியாக நடித்திருப்பார். படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மண்டேலா திரைப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளியை இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த காட்சிகளை தணிக்கை செய்ய, தணிக்கை குழு தவறி விட்டதாக அவர்கள் மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர்.
முடி திருத்தும் தொழிலாளர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க, மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்வது குறித்து பதிலளிக்குமாறு திரைப்பட தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனம், மற்றும் இயக்குநர் மடோனே அஸ்வின் ஆகியோர் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.







