ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு என வி.கே. சிகலா தெரிவித்துள்ளார்.
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திருவிழா விபத்துகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்க வேண்டும் என்று கூறினார். திருவிழாவில் தேர்களின் உயரங்களை நிர்ணயிப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், குறைகூறுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு என்று சசிகலா கூறினார்.
முன்னதாக, நாகை மாவட்டம் நாகூர் தர்ஹாவிற்கு சென்ற சசிகலா, நாகூர் தர்கா ஆதீனம் ஹாசிருள் பாசித் சாஹிப் தலைமையில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி பருகினார். தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னிதியில் வழிபாடு நடத்திய சசிகலா, மலர்ப் போர்வை வழங்கி சிறப்பு துவா செய்தார். இந்நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்குமுன்பு, தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக்கூறிய அவர், தேர்த்திருவிழாவின்போது, மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே, திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுக்காததுதான் விபத்துக்கு காரணம் என விமர்சித்தார். இதனை தொடர்ந்து, சபாநாயகரை முற்றுகையிட்டு அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









