தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று(ஏப்ரல்.24) சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழா பீகாரில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்ற விதம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரின் துயரத்தில் முழு நாடும் துணை நிற்கும். பயங்கரவாதிகளுக்கும் தாக்குதலுக்கு சதி செய்தவர்களுக்கும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப்பெரிய தண்டனையை அனுபவிப்பார்கள்.
பீகார் மண்ணில் இருந்து நான் முழு உலகிற்கும் நான் சொல்லுகிறேன், இந்தியா ஒருவ்வொரு பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கண்டுபிடித்து கண்டிப்பாக தண்டிக்கும். பூமியில் கடைகோடி வரை பயங்கரவாதிகளை துரத்துவோம். பயங்கரவாதம் நிச்சயம் தண்டிக்கப்படும். நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது.
இந்த துயரமான தருணத்தில் எங்களுடன் ஆதரவாக நின்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.









