மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேருபவர்கள் தங்களது பணிகளில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள் என்றும், இத்திட்டம் தேவையில்லாத ஒன்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிலத்தை மீட்டு தந்ததற்கான பாராட்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு சிமெண்ட் ஆலையால் ஏற்படும் விபத்துக்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 2026 ல் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமையும் அதற்கான வியூகம் 2024ல் எடுக்கப்படும் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசின் அக்னிபாத் தேவையில்லாத திட்டமாகும் என்றார். ராணுவத்தில் ஈடுபடுபவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் நான்கு ஆண்டுகள்தான் வேலை என்பதால் ராணுவத்தில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள் எனவே ராணுவத்தில் சேர்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் எனவே இத்திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும். காவல் நிலையங்களில் வெளியில் மட்டுமல்லாமல் காவல் நிலையங்களுக்கு உள்ளேயும் சிசிடிவி கேமரா பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வகையான உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா பேரிடரை சிறப்பாக கையாண்டார்கள் ஆனால் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாது மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நீட் தேர்விற்காக 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், நீட் விலக்கு என்பது சாத்தியமான ஒன்றுதான் எனவே மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எண்ணிக்கையில் வேண்டுமென்றால் அதிமுக எதிர்கட்சியாக இருக்கலாம் என தெரிவித்த அன்புமணி, மக்களுக்கான பல்வேறு பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றி பெற்று வருவது பாமக தான். எனவே, பாமக தான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்றார். அப்போது, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது உட்கட்சிப் பிரச்சனை என அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.
– இரா.நம்பிராஜன்