திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளர் நடுவழியில் இறக்கிவிட்ட பரிதாபம்

கன்னியாகுமரி அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளரை நடுவழியில் இறக்கிவிட்டு நிர்வாகிகள் சென்றனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114…

கன்னியாகுமரி அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளரை நடுவழியில் இறக்கிவிட்டு நிர்வாகிகள் சென்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார். மேலும் நிகழ்ச்சியில் பேசுவதற்காக தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி என்ற தலைமை கழக பேச்சாளர் ஒருவரையும் ரூபாய் 10 ஆயிரம் கொடுப்பதாக அழைத்து வந்தனர்.

 

பொது கூட்டம் முடிந்த பின் பேச்சாளளர் தனக்கு வழங்குவதாக கூறிய பணத்தை கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகிகள் திமுகவை தாக்கி அடிச்சு பேசாததால் பேசிய பணம் தர முடியாது என கூறிவிட்டனர். இதனால், நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 4 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்த நிர்வாகிகள், எஸ்.டி.கருணாநிதியை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

 

 

நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் நிர்வாகிகள் இறக்கிவிட்டதால், அவர் செய்வதறியாமல் தவித்தார். பின்னர் தனக்கு நெருங்கியவர்களை வரவழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பிரத்யேகமாக பின்தொடர்ந்து எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளரை அக்கட்சி நிர்வாகிகளே பாதியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.