குஜராத் தேர்தலில் கடமையாற்றும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நான் தேர்தல் கமிஷனுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முழு உலகத்தில் பாரத திருநாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற உன்னதமான பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்காக இங்கே தேர்தலில் பணியாற்றுகின்ற அனைவருக்கும் நான் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பெருமை, சிறப்பு ஆகியவற்றையெல்லாம் அதிகப்படுத்தும் வண்ணம் இந்த தேர்தலில் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டு வாக்களித்து வருகிறார்கள். ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறினார்.







