காவல்துறையினர் என்னை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டித்து, விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஈழத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனாவார். இவரது தந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்த குமார் பொன்னம்பலம் ஆவார். இவர் சிங்கள அரசின் சதியால் 2000-ம் ஆண்டு, ஜனவரி 5 -ம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது தாத்தா மற்றும் தந்தை வழியில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும், இறையாண்மையை மீட்கவும் ஜனநாயக முறையில் போராடி வருகிறார். அந்த வகையில், கஜேந்திர குமார் பொன்னம்பலம் வடமராச்சி என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரிமை பிரச்னை ஒன்றை எழுப்புவதாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, கொழும்பு நகரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சாதாரண உடையில் வந்த இலங்கை காவல்துறையினர், வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின் போது, கஜேந்திர குமார் பொன்னம்பலம், காவல்துறையினரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுக்கவே, தன்னை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தபோது போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யும் வந்த காவல்துறையினரில் ஒருவர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியும் உள்ளார். இதனைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவரின் இந்த கைது நடவடிக்கை தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் இருந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் தன்னை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டித்து, தனது விடுதலைக்காக குரல்கொடுத்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிறீலங்கா காவல்துறையினர் என்னை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டித்து, எனது விடுதலைக்காக குரல்கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றி. உங்கள் ஆதரவே எமது பலம். அடக்குமுறைக்கு அடிப்பணியாமல் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காகவும் தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் நாம் தொடர்ந்தும் போராடுவோம் என அவர் கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா