விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழாவின் திருத்தேரோட்டம் மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை பெருவிழா கடந்த 23ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

சுமார் 50 அடி உயரம் கொண்ட திருத்தேர் தொம்பை. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது. திருத்தேரில் தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.


மேல ராஜ வீதியில் இருந்து துவங்கிய திருத்தேர், வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி,
தெற்கு ராஜ வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைய இருக்கிறது. பக்தர்கள் பூஜை செய்ய வசதியாக 14 இடங்களில் திருத்தேர் நிலை நிறுத்தப்படுகிறது. மங்கள வாத்தியங்கள் இசைக்க திருத்தேர் ராஜ வீதிகளில் வலம் வருகின்றன. திருத்தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர். இதனால் தஞ்சை நகரமே விழாக் கோலம் கொண்டுள்ளது.

மேல ராஜவீதி தேரடி நிறுத்தத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் உள்ளிட்டவர்கள் திருத் தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.