ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதும் இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் உறுதி செய்ய முடியும்.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவான் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை நான்கு திசைகளிலும் பறக்கவிட்ட இந்த ஜோடி, அணிக்காக 141 ரன்கள் குவித்தது. 50 பந்துகளில் 79 ரன்கள் விளாசிய நிலையில் ருதுராஜ் கெயிக்வாட் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து வெளியேறினார். அடுத்த பந்தில் 87 ரன்கள் விளாசியிருந்த டெவான் கான்வேவும் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 20 ரன்களும், கேப்டன் எம்.எஸ்.தோனி 5 ரன்களும் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.







