ஸ்ரீவில்லிபுத்தூர் தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள்
சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பௌர்ணமி மற்றும் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் சுந்தர மகாலிங்கம் சுயம்பு வடிவாக காட்சி தருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதம்தோறும் 8 நாட்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தை மாத பௌர்ணமி மற்றும் தைப்பூச தினத்தை முன்னிட்டு கடந்த 3,4,5,6
ஆகிய 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி நாட்களான 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த காரணத்தினாலும் மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்ததாலும் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. 
தற்போது மழைக்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பௌர்ணமி மற்றும் தைப்பூசத் தினமான இன்றும், நாளையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் காலை 6 மணி முதலே ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு மலையர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மலைக் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்த உடன் மலையிலிருந்து இறங்க பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் மழை பெய்தாலோ அல்லது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலோ பக்தர்களுக்கான அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.







