அரசியலில் இருந்து விலகும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா!

தாய்லாந்து பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிரயுத் சான்-ஓச்சா, அப்போது…

தாய்லாந்து பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிரயுத் சான்-ஓச்சா, அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது யுடிஎன் கட்சி 23.34% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரின் தலைமையிலான யுடிஎன் கட்சி படுதோல்வியடைந்தது. 2019-ம் ஆண்டில் முதலிடம் பிடித்த அவரது கட்சி இந்த தேர்தலில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்த பிரயுத் சான்-ஓச்சா அரசியலில் இருந்து முழுமையாக தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரயுத் சான்-ஓச்சா தனது முகநூல் பக்கத்தில், ”யுடிஎன் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கட்சியின் பிற தலைவர்களும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.