ஜப்பான் கடல் உணவுகளுக்குத் தடை: ஃபுகுஷிமா விவகாரத்தில் சீனா எச்சரிக்கை!

புகுஷிமா மற்றும் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து வரும் கடல் உணவுகளுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு சுனாமி மற்றும்…

புகுஷிமா மற்றும் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து வரும் கடல் உணவுகளுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென்கொரியா கூறியது. சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி அமைப்பு (IAEA), பெரும் சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ததில் போதுமான அளவு பாதுகாப்பு இருப்பதாக கூறியிருந்தது.

கடந்த மே மாத இறுதியில் தென் கொரியா, புகுஷிமா ஆலையில் செய்த ஆய்வின் அடிப்படையிலும், ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அளித்த மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் புகுஷிமா அணுமின் ஆலையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் சுமார் 10 லட்சம் டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியிடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று தென் கொரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து அணு உலை நீரை கடலில் கலந்தால், அந்த நாட்டிலிருந்து கடல் உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப் போவதாக ஹாங்காங் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் லீ கூறியதாவது, “ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலக்க ஜப்பான் அதிகாரிகள் முடிவெடுத்துள்ள விவரம் அறிந்து மிகவும் எச்சரிக்கை அடைந்துள்ளோம். அந்த முடிவை ஜப்பான் செயல்படுத்தினால், அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் ஜப்பான் உணவுப் பொருள் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த நீர், தற்போது பாதுகாப்பான அளவுக்கு அதிலிருந்து கதிர்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினாலும் அண்டை நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.