தை அமாவாசை தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
முன்னோர்களுக்கு தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் தை அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அதேபோல, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குற்றாலத்தில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரி படித்துறையில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வருகை தந்ததால் இருநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அண்மைச் செய்தி: மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு
அதேபோல, முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய மக்கள், அரிசி, எள் போன்றவற்றை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
இதனிடையே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. தை அமாவாசை தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








