தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், தமிழக அரசு புதிய தளர்வை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறந்தால், குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் (22 காரட்) வழங்கப்படுகிறது. இதற்காக கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்துறையின் PICME RCH ID பெற்றிருப்பதும் அவசியமாகும்.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்கும் வகையில் விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்திருக்க வேண்டும். மேலும், அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதித்தளர்வு, 2026 ஜூன் 22-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.




