ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு 417 தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ள அவர், இது கடந்த 2019ல் 255 ஆகவும், 2020ல் 244 ஆகவும், 2021ல் 229 ஆகவும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள நித்யானந்த ராய், இது 2019ல் 80 ஆகவும், 2020ல் 62 ஆகவும், 2021ல் 42 ஆகவும் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதேபோல், 2018ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டதாகவும், இது 2019ல் 39 ஆகவும், 2020ல் 37 ஆகவும், 2021ல் 41 ஆகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மையினரின் நிலை குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள நித்யானந்த ராய், கடந்த 2 மாதங்களில் சிறுபான்மை பண்டிட் சமூகத்தினருக்கு எதிராக 2 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பண்டிட் சமூகத்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










