டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 4.40 மணியளவில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பின்னர் தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், கட்டடத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். மேலும் புகை மண்டலமாக உள்ளதால் இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் அவர்களின் உடல்கள் எங்கு உள்ளது என்பது உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்டதும், சிலர் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வணிக அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் அருகே முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement: