பால் பாய் முதல் பல்கலைக்கழகம் வரை டென்னிஸில் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்
டென்னிஸ் விளையாட்டில் உட்சம் தொட்ட சம்பவங்களின் வாழ்கையைத் திரும்பிப் பார்த்தால், ஒரு தருணத்தில் பால் பாயாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இன்று ஜாம்பவானாக உருவெடுத்து இருப்பார்கள். ரோஜர் பெடரரின் நீங்கா நினைவுகளோடு இருப்பது அந்த தருணங்கள் தான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“நான் அன்று அண்ணாந்து பார்த்த ஜாம்பவான்கள் எல்லாம், இன்று என்னைப் பெயர் சொல்லி அழைக்கக் காரணம், எனக்கான தனி ஒரு அடையாளம் மட்டுமின்றி டென்னிஸின் அடையாளமாகவே மாறியுள்ள நான் தான் ரோஜர் பெடரர்” எனப் புத்தகம் எழுதும் அளவிற்கு தன் வாழ்க்கையைக் கதைகளுக்கு அர்ப்பணித்து இருக்கிறார் ரோஜர் பெடரர்.
புல்தரை நாயகன் என்று வர்ணிக்கப்படும் பெடரர் தனது 24 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 1500 போட்டிகளுக்கும் மேலான உயர்தர போட்டிகளைக் களம் கண்டுள்ளார். மேலும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, தான் ஒரு பெயர் மட்டும் அல்ல, கிராண்ட் ஸ்லாம்களின் எடுத்துக்காட்டு எனச் சொல்லாமல் சொல்லுகிறார் ரோஜர் பெடரர்.
தனது வாழ்நாளில் 237 வாரங்கள், ATP தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்த பெருமைக்குச் சொந்தக்காரரான ரோஜர், 2003 ஆம் ஆண்டு டென்னிஸ் -ல் பெருமையான பட்டமாகக் கருதப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
அதன்படி ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை 2004, 2006, 2007, 2010, 2017, 2018 என 6 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017 என 8 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2004, 2005, 2006, 2007, 2008 என 5 முறையும், பிரஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும் வென்று இமாலய சாதனை படைத்து இருக்கிறார் ரோஜர்.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாடிய பெடரர், 4 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற பீட்டே சம்பரஸ்-யை ஒரு ஆட்டத்தில் வீழ்த்திய தருணம், சர்வதேச டென்னிஸ் அரங்கத்தில் அவருக்கான துவக்கப் புள்ளியாக மட்டுமல்லாது, “ஒரு நாயகன் உதயமாகிறான்” என தனி ரசிகர் பட்டாளமும் உருவெடுக்க ஆரம்பித்தனர்.
எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பெடரர், தன் ரசிகர்களால் பெட் எக்ஸ்பிரஸ் என்றும், ஸ்விஸ் மேஸ்ட்ரோ என்றும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார். அவரது வாழ்நாளில், பெடரரின் ஆட்டத்தில், ஒரு சிறந்த முயற்சி எது என்று கேட்டால் அது 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரபேல் நடாலுக்கு எதிரான விம்பிள்டன் தொடர் ஆட்டமாகத் தான் இருக்கக் கூடும்.
அதாவது அந்த ஆட்டத்தின் ஒட்டுமொத்த நேரத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது, இரு ஜாம்பவான்களும் கிட்டத்தட்ட 4 மணி நேரம் 48 நிமிடங்கள் அந்த போட்டியை விளையாடி உள்ளனர். ஆனால் அப்போட்டியில் நடால் பெடரரை, 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
டென்னிஸ் விளையாட்டிற்கே பல வியூகம் வகுத்த பெடரரின் சாதனை வரலாறுகளை ஒரு குறிப்பாகத் தொகுத்து, வருங்கால தலைமுறைக்கு “ஒரு நாயகனின் கதை” எனக் கொடுத்தால் கூட, நீண்ட காலம் ஆனால் கூட மீண்டும் ஒரு பெடரர் உருவெடுத்தாலும் கூட, அவருக்கு நிகர் அவர் மட்டுமே!
தனது 41 வயதில், டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் உணர்கிறேன் என்று தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். தான் கனவு கண்டதை விட டென்னிஸ் தாராளமாகத் தன்னை வழி நடத்தியது என்றும், இப்போது எனது டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது, என்பதை நான் அடையாளம் காண வேண்டும் என்று பதிவிட்டுள்ள அவர் தனக்குப் பக்கபலமாக நிற்கும் மனைவி மிர்காவுக்கு மேலும் எனது நன்றிகள் என என எழுதியுள்ளார்.
“டென்னிஸ் மீதான தனது காதல் தொடங்கியபோது, சொந்த ஊரான பிசெலில் ஒரு பால் பாயாக இருந்ததை நினைவு கூர்ந்துள்ள ஃபெடரர், கனவு காண ஆரம்பித்து அதற்காகக் கடினமாக உழைத்ததாகவும் கடிதத்தில் முடிவுரை எழுதியுள்ளார்.
சாதிக்க வயது தடையில்லை, என்ற பல தத்துவ வார்த்தைகள் சிலரின் வாழ்கையில் உண்மையாகலாம். அன்று முதல் இன்று வரை டென்னிஸ் எனும் விளையாட்டிற்கே அடையாளமாக விளங்கிய வீரர் தற்போது, வருங்காலம் வியந்து பார்க்கும் பல்கலைக்கழகமாக ஓய்வு பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ரோஜர் பெடரர்.
நியூஸ் 7 தமிழ் செய்திகளுக்காக நாகராஜன்