தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையின் அளித்த தகவல்கள் மற்றும் 258 பக்க அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் முன் அனுமதியுடன் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆர் அறிக்கையின்படி,
கே.என்.நேரு (முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்)
கே.என்.மணிவண்ணன் (கே.என்.நேருவின் சகோதரர்)
என்.ரவிச்சந்திரன் (கே.என்.நேருவின் சகோதரர்)
கவி பிரசாத் (கே.என்.நேருவின் நெருங்கிய உதவியாளர்)
டி.ரமேஷ் (டி.வி.எச் குழுமம்)
டி.பிரபு (டி.வி.எச் குழுமம்)
ஆர்.சசிப்ரியா (முன்னாள் நகரமைப்பு அலுவலர், கோவை)
ஜி.பாலச்சந்திரன் (முன்னாள் மண்டல பொறியாளர், திருப்பூர்)
ஜி.முருகேசன் (முன்னாள் மண்டல பொறியாளர், திருப்பூர்)
எஸ்.சுதர்சனம் (முன்னாள் எம்.எல்.ஏ, மாதவரம்)
ஜே.ஜே.எபினேசர் (முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.கே.நகர்)
சி.டி.கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் (சென்னை)
கே.சதீஷ் குமார் (காண்ட்ராக்டர்)
வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் சிக்கிய ஆதாரங்கள்:
கே.என்.நேருவின் உதவியாளர் கவி பிரசாத்தின் மொபைல் போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் படங்களின் மூலம், டெண்டர் முடிவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“கட்சி நிதி” (Party Fund) என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5% முதல் 10% வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசுப் பொறியாளர்கள் இதில் தொடர்பு கொண்டு, லஞ்சக் கணக்கீடுகளை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்ட விவரங்களும் அறிக்கையில் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.




