திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – கோயில் நிர்வாகம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உள்ள நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வாங்கவேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியிட்டுள்ள பதிவில், “உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் (மேனாள் தலைமை நீதிபதி, மேகாலயா உயர்நீதிமன்றம்) மற்றும் வி.பார்த்திபன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) ஆகியோரது நேரடி மேற்பார்வையில், இன்று (28.11.2026) மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்நிகழ்விற்காகத் திருக்கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்களின் பாதுகாப்பு, மலைப்பகுதியின் புனிதம் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட குழுவினரைத் தவிர இதர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அமைதியையும் சட்டம்-ஒழுங்கையும் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.