பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும், அந்த மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நேரில் சந்தித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மீண்டும் முதலமைச்சரானார் நிதிஷ் குமார். இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசியல் குறித்து இரு மாநில முதல்வர்களும் கலந்தாலோசனைகள் நடத்தினார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஐதராபாத்தில் சந்திரசேகர் ராவை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் இருந்தார்.
தெலங்கானாவில் உள்ள பெடபள்ளியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு சந்திரசேகர் ராவ் பிகார் சுற்றுப் பயணத்தை அறிவித்தார்.
முன்னதாக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். அவரோடு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் துணைத் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டுள்ளார். சுகாதாரம், சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய முக்கிய துறைகள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்க்கு அளிக்கப்பட்டுள்ளன.








