குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் கீழ், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி உயிரிழந்ததில் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக் கொண்டதை அடுத்து, ஜாகியா ஜாப்ரி மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017ல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜாகியா 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கன்வில்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அதில், வேண்டும் என்றே சிலருக்கு எதிராக செயல்படுவதற்காக இந்த வழக்கை தீஸ்தா செதல்வாட் பயன்படுத்திக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட ஜாகியா ஜாப்ரி உணர்வோடு அவர் விளையாடியுள்ளதாகவும் இந்த பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில் தீஸ்தா செதல்வாட்டை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.











