இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்துள்ளார். இதனால் மணிரத்னத்தை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.
தமிழ் சினிமாவில் ”தாஜ் மஹால்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், தான் இயக்கும் முதல் படத்தில் தனது தந்தையை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக இளையராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் பாடல் பதிவு அண்மையில் நடைப்பெற்றது.
இந்நிலையில், ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். பாரதிராஜாவின் கதைத்தழுவலை அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் படத்திலும் எதிர்பார்த்து ஒரு குழு ரசிகர்களும், இளையராஜா-பாரதிராஜா மறுஇணைப்புக்கு ஒரு குழு ரசிகர்களும், எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு குழு ரசிகர்களும் இருக்க, இதற்கு இடையே டீசர் வெளியானது கலவையான விமர்சனத்தோடு வரவேற்பு பெற்றுள்ளது.






