கமுதி அருகே இடமாறுதலில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதும், மாணவர்கள் தவறு செய்தால் தண்டிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீபகாலமாக மாணவர்களிடம் எல்லை மீறி வன்முறையில் இறங்கும் ஆசிரியர்கள் பற்றிய பல சம்பவங்கள் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் தற்போது நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2014ஆம் ஆண்டு முதல் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தார் மணிகண்டன். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு பணிமாறுதல் உத்தரவு பெற்றார். பணிமாறுதல் உத்தரவைப் பெறப் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மணிகண்டனுக்கு பள்ளி மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.
மாணவ மாணவிகளிடம் மரியாதையுடன், அன்புடன் பழகும் ஆசிரியர் மணிகண்டன், மாணவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகி வந்தார். ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.








