ஆசிரியர் தகுதி தேர்வு; பணிநியமன ஆணை வழங்க கோரி போராட்டம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடைபெற்றது.  TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர்…

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடைபெற்றது. 

TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டியும், கடந்த 2021 ஆம் சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை 177ன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும், பணி நியமனத்தின் போது வயதை கருத்தில் கொண்டு பழையபடி வயது தளர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தான் கல்வித்தரம் கீழே சென்றுள்ளது. போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

எனவே அனைத்து பள்ளிகளிலும் காலிப்பணியிடங்களை நிரந்தர பணியிடமாக நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மறுநியமன
போட்டி தேர்வை முற்றிலும் நீக்கிவிட்டு, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
என்று கூறினார்.

பலரின் குடும்பச் சூழல் கடந்த 10 ஆண்டுகளில் மாறி உள்ளது. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத வரை இந்த போராட்ட இடத்தை விட்டு நகரமாட்டோம். அனைத்து ஆசிரியர்களும் மடிவதற்கும் கூட தயாராக இருக்கிறோம். உடனடியாக அரசு எங்கள் போராட்ட குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில் இது தொடர் போராட்டமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தை TNTET தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.