சீமானுடன் இணையும் தமிழக வாழ்வுரிமை? – வேல்முருகன் விளக்கம்

தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்பட காலம் பதில் சொல்லும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.   புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், சாதி…

தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்பட காலம் பதில் சொல்லும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக வருகின்ற 16-ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாக கூறினார்.

 

தமிழகத்தில் தமிழர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்புகள் கிடைக்க செய்ய வேண்டும். என்எல்சியில் 296 பணியிடம் நிரப்பப்பட்டதில் பூர்வாங்க குடிமக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. டிஎன்பிசி தேர்வில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் சமுதாயத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் என்ன நடந்தது என்பதை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விளக்க வேண்டும். மாணவி மரணம் தொடர்பாக எந்தவித விசாரணையும் தனி நபர்கள் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

 

டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து போராடி வருகின்றோம். எங்களது போராட்டம் தொடரும்.. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் தழிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கலந்து போராடியுள்ளோம் என்றார். அப்போது, சீமானுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி இணையுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய வேல்முருகன், தமிழர்களின் உரிமைக்காக தேவைப்பட்டால் எதிர் காலத்தில் இணைந்து செயல்படலாம் இதற்கு காலம் பதில் சொல்லும் என விளக்கமளித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.