காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 4 தங்க பதக்கங்களை வென்ற இந்தியா

  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெத் போட்டியில் இன்று ஒரே நாளில் 4 தங்க பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதனுடன் சேர்த்து இந்த தொடரில் இந்தியா பெற்றுள்ள மொத்த தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 17ஆக…

 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெத் போட்டியில் இன்று ஒரே நாளில் 4 தங்க பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதனுடன் சேர்த்து இந்த தொடரில் இந்தியா பெற்றுள்ள மொத்த தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாக்களின் ஒன்றான காமன்வெல்த் போட்டிகள் கடந்த 28ந்தேதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் தொடங்கியது. 10வது நாளான இன்று ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் வடக்கு அயர்லாந்தின் கேரில் எம்.சி. நாவ்லை எதிர்கொண்டார். இதில் 5க்கு பூஜ்யம் என்கிற புள்ளிகள் கணக்கில் கேரில் எம்.சி. நாவ்லை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார் நிகத் ஜரீன். ஏற்கனவே நிது கங்காஸ், அமித்பங்கால் ஆகியோர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு  இன்று தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

முன்னதாக ஆண்களுக்கு டிரிபுள் ஜம்ப் நீளம் தாண்டுதல் போட்டியில் எல்தோஸ் பால் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இன்று ஒரே நாளில் காமன்வெத் போட்டியில் இந்தியாவிற்கு 4 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.  இது தவிர டிரிபுள் ஜம்ப் நீளம் தாண்டுதல் போட்டியில் அப்துல்லா அபுபக்கர் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்துள்ளார்.  ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணியும், 10 ஆயிரம் மீட்டர் ரேஸ்வாக் போட்டியில் சந்தீப் குமாரும், வெண்கலப் பதக்கங்களை இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளனர். ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் இந்தியா 2க்கு 1 என்கிற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

காமன்வெத் தொடரில் தற்போதுவரை  17 தங்கம் 12 வெள்ளி, 19 வெண்கலம் உள்பட 48 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது.  61 தங்கம் உள்பட 164 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 51 தங்கம் உள்பட 157 தங்கப் பதக்கங்களை வென்று இங்கிலாந்து 2வது இடத்தில் உள்ளது. 23 தங்கம் உள்பட 85 பதக்கங்களை வென்றுள்ள கனடா பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 17 தங்கம் உள்பட 46 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5 இடத்தில் நியூசிலாந்து உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.