தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.   மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு எனும் பகுதியில் கார்…

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

 

மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு எனும் பகுதியில் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் இன்று அடையாளம் காணப்பட்டது. அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உடல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரைக்குடியை சேர்ந்த கணேசன் (50), கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில் (45), திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி (45) ஆகியோர் உடல்களும் தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க, இந்திய அரசின் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.