அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் பனிமலையில் சிக்கியுள்ளனர். தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என நியூஸ் தமிழ் வாயிலாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. கன மழையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மூ காஷ்மீர் மநிலத்திலும் தொடர்ச்சியாக கன மழை மற்றும் பனிச் சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க பல இடங்களில் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர். கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பனிமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டிலிருந்து அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பயணிகள் தமிழகம் வர முடியாமல் சிக்கியுள்ளனர். தமிழகம் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த நபர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டு அமர்நாத் யாத்திரை பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீநகருக்கும் காஷ்மீருக்கும் இடையில் பனி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டதால் மணி காம்ப் என்ற முகாம் இடத்தில் நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மாட்டி சிக்கி தவிப்பதாக அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அமர்நாத் யாத்திரைக்கு சென்று பனிமலையில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார்.. அவர் தெரிவித்ததாவது..
“ நாங்கள் மொத்தம் 17பேர் உள்ளோம். சாலைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் நடுவழியில் நிற்கின்றன. இதனால் எங்களால் ஜம்முவிற்கு செல்லமுடியவில்லை. நாங்கள் செல்ல வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறோம். அரசு கவனத்தில் கொண்டு எங்களுக்கு உதவ முன் வரவேண்டும்” என சங்கர் தெரிவித்தார்.







