குருப் 4 பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்காக 2022 ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் 2023 மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வினை 18 லட்சம் பேர் எழுதினர்.
முதலில் இந்தப் பணியிடங்களில் 7301 இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்விற்கான விண்ணப்பம் பெறப்பட்டது.அதனைத் தொடர்ந்து அரசால் கூடுதலாக நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 10,217 என உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதற்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது.தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் தனிப்பட்ட ஈமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேர்வாணைய இணையதளத்திலும் அழைப்பு கடிதம் வெளியிடப்படும் . தபால் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்படாது.
தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் உண்மை தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி கலந்தாய்வு ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.






