ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயில ஏதுவாக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15-ம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக அவர் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச முடிவெடுத்து அதற்கான அறிவிப்புகள் வெளியாகின.
தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசினார்.
நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. அவருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கண்தானம் செய்வதற்காக விழியகம், இரத்த தானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிப்போருக்காக விருந்தகத்தை தொடங்கிய விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலையை தொடங்குகிறார்.
மேலும் முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது. விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.







