தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவிகிதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியாக அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குப்பதிவும் குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது 74.24 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், தற்போது அதைவிட குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி உள்ளது.







