தமிழக வரலாறு குறித்து விவாதிக்க தயாரா என அமைச்சர் பொன்முடி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்திருந்த நிலையில், விவாதிக்க தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளையொட்டி மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் மோடியின் 20 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கண்காட்சி நிகழ்ச்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழாவையொட்டி மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வகையில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு மத்திய அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக ஆளுநர் தமிழக அரசு குறித்து தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், அமைச்சர் பொன்முடி தமிழக வரலாறு குறித்து விவாதிக்க தயாரா என்று கேட்டுள்ளதற்கு பொன்முடி கட்சியின் தலைவர் அல்ல, அவர் அமைச்சர் மட்டுமே என்றும், திராவிட மாடலா தமிழக மாடலா என விவாதிக்க தயாராக இருப்பதாகவும் இடத்தை நேரத்தையும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தால் எங்கள் கட்சியிலிருந்து துணைத் தலைவர் ஒருவர் அவருடன் நேரலையில் விவாதிக்க தயார் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். கடந்த 13 மாத திமுக ஆட்சியின் ஊழல்களையும் விவாதிக்க தயார் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பாஜக அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவத்தில் பாஜக நிர்வாகிகளை அமைதி காக்கும்படி கூறியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.







