தமிழகத்தின் முதல் பெண் உளவுத்துறை டிஐஜியாக ஆசியம்மாள், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் எல்லா துறைகளிலும் தொடர்ந்து சாதனைபுரிந்து வந்தாலும், சில பதவிகளில் அவர்கள் நியமிக்கப்பட இன்னும் போராட வேண்டி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முதல் பெண் உளவுத்துறை டிஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கொங்கராய குறிச்சி என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆசியம்மாள். இவர் எம்எஸ்சி, எம்டெக், எம்பிஏ படித்தவர். 1996ஆம் ஆண்டு குரூப் 1 முதன்மை தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் இவர் மதுரை மாவட்டத்தின், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் டிஎஸ்பியாக பணியாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து மாம்மல்லப்புறம் துணைப்பிரிவின் டிஎஸ்பியாக அவர் பணியாற்றினார். திருவொற்றியூர் துணைப்பிரிவின் உதவி ஆணையராகவும், சென்னை போக்குவரத்துக் காவல் பிரிவு துணை ஆணையராகவும் பணியாற்றிய இவர், தேனி மாவட்டத்தின் ஏடிஎஸ்பியாக பணி உயர்வு பெற்றார். சுமார் இரண்டரை வருடங்கள் இந்தப் பணியில் அவர் நீடித்தார்.
இவரது கணவர் இப்ராகிம் மரைக்காயர், இந்தியன் சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆசியம்மாள் குறித்து அவர் கூறுகையில், ’அதிக மன உறுதியாலும், கடுமையான உழைப்பாலும் இந்த நிலைக்கு என் மனைவி உயர்ந்திருக்கிறார்’ என்று அவர் கூறியுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்குமே திருமணம் ஆகிவிட்டது. மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ் எம் சுலைமான் இவரது உறவினர் ஆவார்.