தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஆயிரத்திற்கு கீழ் பதிவான தினசரி பாதிப்பு, 10,000 த்தை கடந்து பதிவாகி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த இன்று முழு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 28,00,286 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 36,855 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 1,808 பேர் குணமடைந்துள்ளனர். பூரண நலம்பெற்றவர்கள் எண்ணிக்கை 27,12,096 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் 51,335 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6,186 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 1512 பேருக்கும், திருவள்ளூரில் 702, கோவையில் 608 பேருக்கும் பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒமிக்ரானை பொறுத்தவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 179 பேர் குணமடைந்தனர்.








