தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திண்டுக்கல்லில் 6 நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்துக்கு 15 ஆயிரம் தடுப்பூசிகள் வந்ததால், மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால், ஏராளமானோர் குவிந்ததால், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 73 கொரோனா தடுப்பூசி மையங்களில், 5 நாட்களுக்கு பிறகு தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் குவிந்தனர். இதனால், முகாம்களில், பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். குறிப்பிட்ட அளவு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருந்ததால், பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பணகுடி, துலுக்கர்பட்டி, வடக்கன்குளம், செட்டிகுளம் உட்பட 6 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கூட்டம் அலைமோதியதால், அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, வரிசையாக தடுப்பூசி போடப்பட்டது.
கும்பகோணம் நகராட்சியில் உள்ள காரனேசன் மருத்துவமனை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்கு, 18 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தடுப்பூசி போட அதிகமானோர் குவிந்ததால், காவல்துறையினர் மூலம் வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தடுப்பூசி முகாமுக்கு 200 தடுப்பூசி மட்டுமே வந்த நிலையில், 1500-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சமூக இடைவெளியின்றி மக்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர்.
கரூரில் கடந்த 5 நாட்களுக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மருத்துவமனையின் வெளிப்பகுதியில், சாலை வரை வரிசை நீண்டிருந்தது. இதனால், பல மணி நேரம் காத்திருந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.







