தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழகத்தில் இந்த 2 வாரத்தில் ஏராளமான திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் , பெண்கள் எல்லாருக்கும் சாதாரண கட்டண பேருந்தில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலை என பட்டியலிட்டார்.
கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக பேசிய முதல்வர், கொரோனா தானாக பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாகவே பரவுகிறது. மக்களின் நன்மைக்காகவே முழு ஊரடங்கு என்பதை உணர வேண்டும் என்றும், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்து தான் ஆனால் அதை எடுத்து அருந்தியே ஆகவேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், “தமிழக மக்களைக் கெஞ்சி கேட்கிறேன் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணியுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.







