தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பைத் தரும் எழுத்தாளர்கள், மொழிபெயர்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை இன்று அறிவித்தது மத்திய அரசு. அதில் எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1964ம் ஆண்டு பிறந்த இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் இமையம் 1994 ஆம் ஆண்டு எழுதிய கோவேறு கழுதைகள் நாவல், இலக்கிய உலகில் புதிய வழியை உண்டாக்கியது.
தமிழ் இலக்கியச் சூழலில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும் இமையம் மண்பாரம், கோவேறு கழுதைகள், வீடியோ மாரியம்மன், எங் கதே உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார். விளிம்பு நிலை சமூகத்தைப் பற்றி பேசும் இவரின் எழுத்துக்கள் அம் மக்களின் மொழியிலேயே வெளிப்பட்டது.
தென்னாற்காடு பகுதிகளில் நிலவும் சாதியப் பிரச்சினைகளை தனது எழுத்தின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியவர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி இமையம் எழுதிய பெத்தவன் குறுநாவல் பரவலாகப் பேசப்பட்டது. இவரின் நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
விருது வழங்கப்பட்டது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இமையம், “திருமணமான இளம்பெண்கள் தீக்குளித்து, விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தமிழ் சமூகத்தில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த அவலம் ஒழிய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதுதான் செல்லாத பணம் நாவல்” என்றார்.
1994ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது தள்ளிப்போனதாகவும் குறிப்பிட்ட இமையம், இப்போது சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் விவரித்தார்.