புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் நீண்டகால கனவு எனவும், அதனை வரும் 28 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியே திறந்து வைப்பார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் நீண்டகால கனவு எனவும், அதனை வரும் 28 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியே திறந்து வைப்பார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளன. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டி வருகிறது. மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு  கண்டனம் தெரிவித்தோடு, விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமிர்தகால கொண்டாட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் கனவு திட்டம். அதனை வரும் 28 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியே திறந்து வைப்பார்.

ஜவஹர் லால் நேரு ஆகஸ்ட் 14, 1947 அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் செங்கோலை ஏற்றுக் கொண்டார். இது ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாகும். தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்கள் வழங்கிய அந்த செங்கோலை வைப்பதற்கு நாடாளுமன்றத்தை விட சிறந்த இடம் வேறு இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க அந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும். அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார்.

மேலும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 60 ஆயிரம் பேரை பிரதமர் நரேந்திர மோடி கௌரவிப்பார்.

புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை நவீனத்துவத்துடன் இணைக்கும் அழகான முயற்சிதான் நாடாளுமன்றக் கட்டடம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக காங்கிரஸ்,  திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த விளக்கத்தை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.