தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் மகளிர் போலீசார் பிரிவு தொடங்கப்பட்டு பொன் விழா கண்டுள்ளது. 17.5 சதவீதம் மகளிர் போலீசாரை கொண்டு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பெண் போலீசாரின் சாதனைகளை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…
தமிழக காவல்துறையில் மகளிர் போலீஸ் பிரிவு சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1973 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி மகளிர் போலீஸ் பிரிவை உருவாக்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு எஸ்.ஐ, ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தமாகவே 22 பேருடன் சென்னையில் தொடங்கப்பட்ட மகளிர் போலீஸ் பிரிவு, இன்றைய தினம் ஒரு டிஜிபி, 2 கூடுதல் டிஜிபி-க்கள், 14 ஐ.ஜி-க்கள் உட்பட 35 ஆயிரத்து 329 பேருடன் தமிழகம் முழுவதும் கோலோச்சி நிற்கின்றனர்.
1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, மகளிர் போலீஸ் பிரிவின் அடுத்த அத்தியாத்தை தொடங்கி வைத்தார். அவரது உத்தரவின் பேரில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், முழுக்க முழுக்க மகளிர் போலீசாரை மட்டுமே பணியமர்த்தி, முதல் மகளிர் காவல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களை ஆண் போலீசாரிடம் விளக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் விளைவு சென்னையில் 32 காவல் நிலையங்கள் உட்பட, தமிழ்நாடு முழுவதும் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தற்போதுவரை உருவாக்கப்பட்டு செயல்பட்டில் உள்ளன.
அதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மூலமே கமாண்டோ படைகள், அதிவிரைவுப் படைகளை உள்ளடக்கிய மகளிர் போலீஸ் பட்டாலியனும் உருவாக்கப்பட்டது. மகளிர் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டபோது முதல் பெண் எஸ்.ஐ-யாக உஷாராணி என்பவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு வந்த ஒவ்வொருவரும் மகளிர் போலீஸ் பிரிவை உச்சம் தொடவைத்தனர்.
1976 ஆண் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வான திலகவதி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றார். தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டம் ஒழுங்கு டிஜிபி, சென்னையின் முதல் பெண் காவல் ஆணையர் ஆகிய பதவிகளில், கேரளாவைச் சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான லத்திகா சரண் நியமிக்கப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தார். மற்றொரு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் டெல்லி சிபிஐ-யின் கூடுதல் இயக்குனராக பொறுப்பு வகித்து மாநிலத்திற்கே பெருமை சேர்த்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபி-யாக பதவி வகிக்கும் சீமா அகர்வால், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையின் கூடுதல் டிஜிபி-யாக பதவி வகிக்கும் வனிதா போன்றோர், காவல் துறையில் உயர் பதவிகளை மகளிர் அலங்கரிக்க முடியும் என்பதை தற்போதும் நிரூபித்து வருகின்றனர். இதுபோல சென்னையின் முதல் பெண் உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட ஜெயகவுரி தற்போது போலீஸ் அகாடமியின் ஐஜி-யாக பதவி வகிக்கிறார்.
மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிலும் பவானீஸ்வரி, லலிதா ஆகியோர் ஐஜி-க்களாகவும், லட்சுமி டிஐஜி-யாகவும், விமலா மற்றும் சியாமளா தேவி ஆகியோர் எஸ்பி-க்களாகவும் பதவிகள் வகிப்பது புலனாய்விலும் மகளிரின் பங்களிப்பு எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை எடுத்துரைக்கிறது. தமிழ்நாடு ஆயுதப்பட்டையிலும் பெண்கள் தலைமை வகிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரியான ராதிகா ஐஜி-யாக நியமிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார்.
சென்னை தலைமையிட கூடுதல் ஆணையராக சாமுண்டீஸ்வரி, சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மண்டல இணை ஆணையர்களாக ரம்யா பாரதி மற்றும் திஷா மிட்டல் இப்படி இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு காவல்துறையில் பல உயர் பதவிகளை ஆண்களுக்கு நிகராக பெண்களும் அலங்கரிக்கின்றனர்.
இத்தகைய வரலாற்றுப் புகழ்மிக்க மகளிர் போலீஸ் பிரிவின் பொன்விழா ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. அப்போது நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, முதலில் பெண் கைதிகளை அழைத்துச் செல்வது போன்ற பணிகளுக்கு மட்டுமே மகளிர் போலீசார் பயன்படுத்தப்பட்டு வந்த காலம் மாறி தற்போது புலன்விசாரணை பிரிவுகளிலும் மகளிர் போலீசார் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். கடைநிலை காவலர்கள் முதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் வரை தற்போது மகளிர் அங்கம் வகிப்பதாகவும் அவர் கூறினார். மாநிலத்தில் உள்ள மொத்த காவல் நிலையங்களின் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் பெண் காவல் ஆய்வாளர்களே தலைமை பொறுப்பு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர்களை சிறப்பிக்கும் வகையில் பொன்விழா நடத்தி முதலமைச்சர் பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.
பெண்கள் தங்கள் வீட்டையும் கவனித்துக்கொண்டு, காவல் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களுக்கான மிகப்பெரிய சவால்தான் என்கிறார் சென்னை காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்தபோது ஆயிரத்து 229 வழக்குகள் பதிவு செய்து ஆயிரத்து 371 குற்றவாளிகளை கைது செய்ததும், 2020 ஆம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பி-யாக இருந்தபோது குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு செய்த 85 குற்றவாளிகளை கைது செய்ததும் தனது பணியில் சொல்லிக்கொள்ளும் படியான சாதனைகள் என கருதுவதாக கூறுகிறார் நிர்வாகப்பிரிவு ஐஜி மல்லிகா.
”பெண்கள் என்றால் அடுப்படியில் கரண்டி பிடிக்கவே லாயக்கு என்று எண்ணிய பலர், மகளிர் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்ட பிறகு எங்களின் செயல்பாடுகளை பார்த்து அவர்களின் அபிப்ராயங்களை மாற்றிக்கொண்டனர்” என உணர்ச்சி பொங்க தெரிவிக்கிறார் முதல் பெண் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்ட உஷா ராணி.
அடக்குமுறைகளை வேரறுத்து ஆண்களுக்கு நிகராக எந்த பணியையும் பெண்கள் செய்ய முடியும். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து காக்கும் கரங்களாக, சட்டத்தின் தூண்களாக விளங்கமுடியும் என தங்கள் செயலால் உணர்த்தியுள்ளனர் மகளிர் போலீசார்.